பூண்டு போல் விதவை கோலம் பூண்டிருந்த மங்கலம் வறுமையின் விளிம்பில் தவித்து கொண்டிருந்தாள்.. அம்மாவும் மகள் தேவியும் சூளை வேலைக்கு சென்று பிழைத்துக் கொண்டிருந்தார்கள். சூளை முதலாளியின் சாபங்களுக்கிடையில் வாழ்க்கைச் சக்கரம் முன்னும் பின்னுமாய் நகர்ந்து கொண்டிருந்தது... வறுமையிலும் உழைத்த மங்கலம் மல்லிகையாய் மெலிந்தாலும் வாழ்க்கையில் மணமில்லை!
தன் மகளின் எதிர் காலத்தை நினைத்தே கண்ணீர் சிந்திய இரவுகள் பல. தான் படிக்கவில்லை, தன் மகளும் படிக்காமலே இருந்து தன்னைப் போல் வறுமையில் சிக்க விருப்பமுமில்லை.. உடல் நலம் குன்றுவதால் வேலைக்கும் சரிவர போக முடியாத சூழலில், தன் மகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப முடிவெடுத்தாள், எங்கள் தமிழச்சி!!
சேற்றைக் கல்லாய் செதுக்கிய சிற்பியின் விரல்களில் எழுதுகோல் தற்போது, எழுதத்தான் எத்தணிக்கிறது! வயிற்று பிழைப்பிற்கே வழியில்லாத நிலையில், மங்கலமும் மகளோடு பள்ளிக்கூடம் சென்று கொண்டே இருக்கிறாள், மதிய சத்துணவைப் பகிர்ந்து உண்ண!!..
கரும வீரருக்கு நன்றிகள் பல! இரண்டு முட்டைகள், வாழைப் பழமும் வழங்க ஆணையிட்ட கலைஞருக்கும் நன்றிகள் பற்பல!! நன்றிகளை உரித்தாக்கினாலும், இலவச வண்ணத் தொலைக்காட்சிகளை வழங்கி வறுமை ஒழிக்கத் தவறியதற்கு, என் நெற்றிக்கண் சுட்டெரிக்கட்டும் சூரியனை!
செய்திக்காக: 2005ல் நான் எழுதிய கீழ்க்கண்ட ஹைக்கூ கவிதையின் கருவே, கதையாய் மேலே...
தந்தையும் மகனும்
பள்ளிக்கூடம் செல்கிறார்கள்,
மதிய சத்துணவிற்காக!!